சுயம்வரகாண்டம் – பக்கம் 1

நளவெண்பா சுயம்வர காண்டம்

சுயம்வர காண்டம் பக்கம் 1

 
வியாசர் நளன் வரலாற்றைக் கூறல்
—————————————-

சேமவேல் மன்னனுக்குச் செப்புவான் செந்தனிக்கோல்
நாமவேற் காளை நளனென்பான் – யாமத்
தொலியாழி வைய மொருங்கிழப்பப் பண்டு
கலியால் விளைந்த கதை.

ஒப்பற்ற செங்கோலையும் அச்சந்தரும் வேலையுமுடைய காளையைப் போன்ற நளவேந்தன், நள்ளிரவிலும் ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த இம்மண்ணுலகமெல்லாம் ஒருசேர இழக்குமாறு , முன்பொரு காலத்தில் சனியால் நிகழ்ந்த வரலாற்றைக் குடிகளுக்கு நன்மை செய்கின்ற வேலையுடைய அரசனாகிய தருமனுக்கு வியாசர் கூறத் தொடங்கினார்.

(பாரத காலத்துக்கு முன்பு நளன் வரலாறு நிகழ்ந்தது என்பதை நினைவில் கொள்க.)

இனி நளன் வரலாற்றை வியாசர் கூறுவதாக கூறத் தொடங்குகிறார் ஆசிரியர்; முதலில் நளனது நாட்டு வளம், நகர வளம், மக்கள் சிறப்பு முதலியவற்றைக் கூறுகிறார்.

நிடத நாட்டு சிறப்பு.
—————————-

காமர் கயல்புர்ளக் காவி முகைநெகிழத்
தாமரையின் செந்தேன் தளையவிழப் – பூமடந்தை
தன்னாட்டம் போலுந் தகைமைத்தே சாகரஞ்சூழ்
நன்னாட்டின் முன்னாட்டும் நாடு.

கடல் சூழ்ந்த நல்ல நாடுகளில் முதன்மையானதென சிறப்பித்துக் கூறும் நிடத நாடு, அழகிய கெண்டை மீங்கள் பிறழ்வதாலும், குவளைகள் மலர்வதாலும், நல்ல தேனையுடைய தாமரை அரும்புகள் மலர்வதாலும் திருமகளின் கண்களைப் போலச் சிறப்பையுடையதாய் இருந்தது.

மாவிந்த நகரச் சிறப்பு.
—————————-

கோதை மடவார்தங் கொங்கை மிசைத்திமிர்ந்த
சீதக் களபச் செழுஞ்சேற்றால் -வீதிவாய்
மானக் கரிவழுக்கும் மாவிந்தம் என்பதோர்
ஞானக் கலைவாழ் நகர்.

மலர் மாலையை அணிந்த இளம்பெண்களின் தனங்களில் பூசப்பெற்ற குளிர்ச்சி பொருந்திய கலவைச் சாந்தாகிய வளப்பமுள்ள குழம்பால் , தெருக்களில் செல்லும் பெரிய யானையின் கால்கள் சறுக்குகின்றன! அத்தகைய வளமார்ந்த அன்னகர் ‘ மாவிந்த நகரம்’ என்னும் பெயர் பெற்றுள்ளது. அஃது உண்மைக்கலை அறிவு செழித்திருக்கின்ற தன்மையுடையதாயிருந்தது.

அந்நகர மாளிகைகளின் சிறப்பு.
————————————-

நின்று புயல்வானம் பொழிந்த நெடுந்தாரை
என்றும் அகில்கமழும் என்பரால் – தென்றல்
அலர்த்துங் கொடிமாடத் தாயிழையார் ஐம்பால்
புலர்த்தும் புகைவான் புகுந்து.

தென்றலால் அசைகின்ற கொடிகளையுடையவை அந்நகர மாடங்கள். அவற்றில் ஆராய்ந்தெடுக்கப்பட்ட அணிகளை அணிந்த பெண்கள் தங்கள் கூந்தலை உலர்ந்த அகிற்புகை எழுப்புகின்றார்கள்.அப்புகை வானத்தில் எங்கும் பரவுவதால், வானத்திலிருந்து மேகங்கள் பெய்த மழைத்தாரைகளிலெல்லாம் எப்போதும் அகிலின் நறுமணம் கமழ்ந்துகொண்டே இருக்கும் என்று கூறுவர் புலவர்.

அந்நகர மக்கட்சிறப்பு.
————————-

வெஞ்சிலையே கோடுவன; மென்குழலே சோருவன
அஞ்சிலம்பே வாய்விட் டரற்றுவன; – கஞ்சம்
கலங்குவன; மாளிகைமேல் காரிகையார் கண்ணே
விலங்குவன மெய்ந்நெறியை விட்டு.

அந்நகரில் வளைந்திருப்பன, விற்களே ; தளர்ந்திருப்பன, மெல்லிய தன்மையுடைய பெண்களின் கூந்தல்களே ; வாய் விட்டு கதறுவன, பெண்களின் கால்களில் உள்ள அழகிய சிலம்புகளே; சலனமடைவன, நீரிலுள்ள தாமரை மலர்களே; உண்மையான வழியை விட்டு விலகுவன,(தம் கணவர் வருகையை நோக்கி நிற்கும்) பெண்களின் கண்களே.

அலுவலை நாடிச் சென்ற தம் கணவர் வருகையை வழிமேல் விழி வைத்து நோக்கி நிற்கும் பெண்டிர் தூரத்தில் வரும் அயலார் ஒருவரைத் தம் கணவர் என்று கருதி, அவர் அருகில் வர ஏமாறுவதலால் , இங்ஙனம் கூறப்பட்டது.
( செந்நெறி பிறழ்வார், தளர்வார், கதறுவார், கலக்கமடைவார், ஒருவரும் அந்நகரத்தில் இல்லை )

கல்லாரும் இல்லாரும் இலர் எனல்
———————————————–

தெரிவனநூல்; என்றுந் தெரியா தனவும்
வரிவளையார் தங்கள் மருங்கே; – ஒருபொழுதும்
இல்லா தனவும் இரவே ; இகழ்ந்தெவருங்
கல்லா தனவுங் கரவு.

அந்நகர மக்கள் என்றும் ஆராய்ந்து அறிவன, நல்லறிவைப் புகட்டும் நூல்களே; அம்மக்கள் அறியாதவை, பல வரிகள் அமைந்த வளையல் அணிந்த பெண்களின் இடைகளே; அந்நகரில் இல்லாதவை பிச்சை எடுக்கும் தொழில்களே ; எத்தகையவரும் இகழ்ந்து கற்றுக்கொள்ளாதவை வஞ்சிக்கும் தொழில்களே.

கவிஞர் நன்றி.
———————

மாமனுநூல் வாழ வருசந் திரன்சுவர்க்கி
தாமரையாள் வைகுந் தடந்தோளான் – காமருபூந்
தாரான் முரணைநகர் தானென்று சாற்றலாம்
பாராளும் வேந்தன் பதி.

இவ்வாறு வருணிக்கின்ற புலவர், மாவிந்த நகரத்தை வருணித்ததில் அமைதி கொண்டாரில்லை. ஆகலின் , மேலும் வருணிக்க வேண்டும் என்ற ஆவல் துள்ளி எழுகிறது. அதற்குக் காரணம் , “இதுவரை , இத்தனை பாடல்களைப் பாடி விட்டோமே! சந்திரன் சுவர்க்கி நம்மை ஆதரித்தவன் அல்லவா? அவனது பெயரை எடுத்துரைக்கவில்லையே ! ” என்ற ஏக்கம் போலும் ! அதனால் , மீண்டும் ‘மாவிந்த நகரம் சந்திரன் சுவர்க்கி ஆளும் முரனை நகரைப் போன்றது’, எனக் கூறுகிறார். புகழேந்தியாரது நன்றி பாராட்டும் குணத்தை இதனால் அறியலாம். புலவர் கூற்றை கேட்போம்:
–> நிடத நாட்டு அரசனான நளனது மாவிந்த நகரைத் திருமகள் விரும்பி வீற்றிருக்கின்ற உயர்ந்த தோள்களையுடையானும், அழகிய பூமாலையை அணிந்தவனும், சிறந்த மனுநீதி நூல் மேன்மையடைய வந்து பிறந்தவனுமான சந்திரன் சுவர்க்கி என்பவனது முரணையம்பதியைப் போன்றது என்று கூறலாம்

நளன் என்னும் நல்லரசன்.
————————————-

ஓடாத தானை நளனென் றுளனொருவன்
பீடாருஞ் செல்வப் பெடைவண்டோ -டோ
முருகுடைய மாதர் முலைநனைக்குந் தண்டார்
அருகுடையான் வெண்குடையான் ஆங்கு.

‘ஆங்கு பெடை வண்டோடு ஊடா நனைக்கும் தாண்தார் உடையான் வெண்குடையான் ஒருவன் நளன் என்று உளன்!’ என்று கூட்டுக.

( ஓடாத = தோற்று , தானை = சேனை, பீடாரும் = ( பீடு + ஆரும் )பெருமை பொருந்திய, செல்வம் = காதல், பெடைவண்டு = பெண் வண்டு, முருகு = தேன், தண்தார் = குளிர்ச்சி பொருந்திய மலர்மாலை )

இத்தகைய சிறப்பு வாய்ந்த அந்நகரில் , பெருமை பொருந்திய அன்புடைய பெண் வண்டு ஆண் வண்டோடு ஊடியது; அதனால் மலர் மாலையிலிருந்த தேன் வழிந்து ஓடி , பக்கத்தில் உள்ள பெண்களின் மார்பிடமெல்லாம் நனைக்கும் குளிர்ச்சி பொருந்திய மாலையை மார்பில் உடையவன்; வெண்கொற்றக் குடையை உடையவன்; இத்தகைய சிறப்புடையவனாய், பகைவர்க்கும் புறமுதுகிட்டுத் தோற்று ஓடாத சேனைகளையுடைய ‘ நளன் ‘ என்னும் ஒருவன் இருந்தனன்.

நளன் அறநெறியில் அரசு புரிதல்.
———————————————

சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை அறங்கிடப்பத்
தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான் – மாதர்
அருகூட்டும் பைங்கிளியும் ஆடற் பருந்தும்
ஒருகூட்டில் வாழ உலகு.

( சீதம் = குளிர்ச்சி , தாது = மகரந்தம் , அவிழ் = சிந்தும், பூந்தாரான் = அழகிய மலர்மாலையை அணிந்தவன் )

மகரந்தப் பொடி சிந்துகின்ற மலர் மாலையைத் தரித்த நளன், பெண்டி தம் அருகில் வைத்துப் பாலும் பழமும் ஊட்டி வளர்க்கின்ற பச்சைக்கிளியும் பருந்தும் ஒரே கூட்டிற்குள் பகைமை நீங்கி வாழும்படி, குளிர்ச்சியுடைய நிலவு போன்ற வெண்கொற்றக்குடையின் நிழலில், சிறந்த அறங்கள் நிற்கத் தன் நாட்டைத் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் ஆண்டு வந்தான்.

நளன் சோலைக்குச் செல்லல்
—————————————–

வாங்குவளைக் கையார் வதன மதிபூத்த
பூங்குவளைக் காட்டிடையே போயினான் – தேங்குவலைத்
தேனாடி வண்டு சிறகுலர்த்தும் நீர்நாடன்
பூநாடிச் சோலை புக.

( வாங்கு வளை = வளைந்த வளையல், வதனமதி = முகமாகிய சந்திரன், தேங்குவளை = தேம் + குவளை, தேம் = இனிமை, தேனாடி = தேன் + ஆடி, ஆடி = முழுகி. )

இனிமை பொருந்திய குவளை மலரின் தேனில் முழுகி எழுந்த வண்டுகள், தம் சிறகுகளை உலரச் செய்கின்ற நீர்வளம் வாய்ந்த நாடு நிடதம்; அந்நாட்டரசனாகிய நளன் , பூக்கொய்ய விரும்பி சோலைக்குள் செல்லும்போது, வளைந்த வளையல்களை அணிந்த பெண்களின் முகமாகிய நிலவினிடத்து மலர்ந்துள்ள விழிகள் என்னும் அழகிய நீலமலர்க் கூட்டத்தின் நடுவிலே சென்றான்.

–> நளன் சோலைக்குச் சேன்ற போது பெண்கள் அவனையே பார்த்துக்கொண்டிருந்தனர் என்பது கருத்து. இதனால் நளனது அழகிய தோற்றம் புலனாகும்.

நளன் சென்ற காலம் இளவேனில்.
——————————————–

வென்றி மதவேடன்வில்லெடுப்ப, வீதியெல்லாம்
தென்றல் மதுநீர் தெளித்துவர, – நின்ற
தளவேனல் மீதலருந் தாழ்வரைசூழ் நாடற்கு
தளவேனல் வந்த தெதீர்.

( வென்றி = வெற்றி, மதவேடன் = மதவேள் + தன், மதவேள் = மன்மதன், மதுநீர் = தேன் , தளவு = முல்லை, ஏனல் = தினை, அலரும் = மலரும் , தாழ்வரை = மலைச்சாரல். )

முல்லை நிலத்தின்கண் வளர்ந்த முல்லைக்கொடி படர்ந்து குறிஞ்சி நிலத்தின்கண் வளர்ந்துள்ள தினைத்தட்டையின் மீது மலர்கள் பூக்கின்ற மலைச்சாரல் சூழ்ந்த நிடத நாட்டு மன்னனாகிய நளனுக்கு எதிரில் மன்மதன் தனது வெற்றி மிக்க கரும்பு வில்லைத் தாங்கி வரவும் தென்றல் வீதி எல்லாம் மது நீரை தெளித்துக்கொண்டு வரவும் இளவேனிற்பருவம் வந்துற்றது.

நளன் பூங்காவை அடைதல்.
————————————–

தேரின் துகளைத் திருந்திழையார் பூங்குழலின்
வேரிப் புனல்நனைப்ப வேயடைந்தான் – கார்வண்டு
தொக்கிருந்தா லித்துழலுந் தூங்கிருள்வெய் யோற்கொதுங்கிப்
புக்கிருந்தால் அன்ன பொழில்.

( வேரி = தேன், தொக்கிருந்தாலித்துழலும் = தொக்கு + இருந்து + ஆலித்து + உழலும் , தொக்கு = ஒருங்கு சேர்ந்து, ஆலித்து = ஆரவாரம் செய்து, வெய்யோன் = கொடிய கிரணங்களையுடைய சூரியன், பொழில் = சோலை. )

மிக்க இருளானது சூரியன் ஒளிக்கதிர்களின் முன் விலகி ஒளித்துக்கொண்டிருந்தாற்போன்ற கருநிற வண்டுகள் ஒன்றாகக் கூடி மகிழ்ந்து சுற்றித் திரிகின்ற சோலையை, தனது தேர் உருளைகளிற் படிந்த புழுதியைத் திருத்தமான அணிகள் அணிந்த பெண்களது மலர் சூடிய கூந்தலினின்று ஒழுகி வழிகின்ற பூந்தேன் என்னும் நீர் நனைத்துக் கரைக்கும்படி நளன் சேர்ந்தான்!

அன்னம் தோன்றுதல்.
—————————–

நீணிறத்தாற் சோலை நிறம்பெயர நீடியதன்
தாணிறத்தாற் பொய்கைத் தலஞ்சிவப்ப – மாணிறத்தான்
முன்னப்புள் தோன்றும் முளரித் தலைவைகும்
அன்னப்புள் தோன்றிற்றே ஆங்கு.

( நீணிறம் = மிக்க வெண்ணிறம், பெயர = மாறுபட, மாண் நிறத்தான் = நளன், முளரித்தலை = தாமரையில் , அன்னப்புள் = அன்னப்பறவை. )

நள தமயந்தியர் ஒன்று சேரக் காரணமாயிருந்த அன்னம் நளன் முன் தோன்றுகிறது.
அந்தப் பொழிலில் மாட்சிமைப்பட்ட அழகினையுடைய நளன் முன்பு நீரில் முளைத்தெழுகின்ற தாமரை மலரில் தங்கி வாழ்கின்ற அன்னப் பறவை ஒன்று, தன் உடலின் வெண்மை நிறத்தால் சோலையின் பசுமை நிறம் வெண்ணிறமாய் மாறவும் , தன் கால்களின் செந்நிற மிகுதியினால் அங்குள்ள தடாகத்தின் நீரிடமெல்லாம் செந்நிறமாய் மாறவும் தோன்றியது.

நளன் தோழி ஒருத்தியை அன்னத்தை
————————————————–
பிடித்துத்தர ஏவுதல்.
——————————

பேதை! மடவன்னந் தன்னைப் பிழையாமல்
மேதிக் குலமேறி மென்கரும்பைக் – கோதிக்
கடித்துத்தான் முத்துமிழுங் கங்கைநீர் நாடன்
பிடித்துத்தா என்றான் பெயர்ந்து.

( மட அன்னந்தன்னை = இளமை பொருந்திய அன்னத்தை, மேதிக்குலம் = எருமை மந்தை )

அன்னத்தின் அழகில் நளன் மனம் ஈடுபட்டது. ஆதலின், அதனைப் பிடித்துத்தர அவன் தோழி ஒருத்தியை ஏவினான்.

எருமை மந்தை கரும்பு வயலில் புகுந்து மென்மையான கரும்புகளைக் கடித்துக் குதப்பி முத்துகளைக் கக்குகின்றது; அத்தகு நாட்டையுடையவன் நளன். அவன் தோழி ஒருத்தியை பார்த்து, ‘மடவாய் , நீ சென்று இளமை பொருந்திய அந்த அன்னத்தைத் தப்பாமல் பிடித்துக்கொண்டுவந்து கொடுப்பாயாக,’ என்றான்.

கரும்பின் கணுவில் முத்துப் பிறக்கும் என்பது பல நூல்களில் கூறப்படுகின்றது.

மகளிர் அன்னத்தைப் பிடித்தல்.
——————————————-

நாடிமட அன்னத்தை நல்ல மயிற்குழாம்
ஓடி வளைக்கின்ற தொப்பவே – நீடியநல்
பைங்கூந்தல் வல்லியர்கள் பற்றிக் கொடுபோந்து
தங்கோவின் முன்வைத்தார் தாழ்ந்து.

( தங்கோ = தம் + கோ (தம் அரசன்) )

மயில் கூட்டம் அன்னத்தைச் சூழ்ந்தது போலப் பெண்கள் அன்னத்தைச் சூழ்ந்தார்கள்; பெண்டிர் மயில் போன்ற சாயலையுடையவர் எனக் கூறப்பெறுவராதலின், ஆசிரியர் இங்ஙனம் கூறினார்.

மன்னனைக் கண்ட அன்னம் வருந்துதல்.
——————————————————

அன்னந் தனைப்பிடித்தங் காயிழையார் கொண்டுபோய்
மன்னன் திருமுன்னர் வைத்தலுமே – அன்னம்
மலங்கிற்றே தன்னுடைய வான்கிளையைத் தேடிக்
கலங்கிற்றே மன்னவனைக் கண்டு.

( ஆயிழையார் = ஆராய்ந்தெடுக்கப்பட்ட அணிகலைப் பூண்ட மகளிர்; மலங்கிற்று = மருண்டது ; வான் கிளை = பெருஞ்சுவர். )

ஆராய்ந்தெடுக்கப்பட்ட அணிகளையுடைய மகளிர் அன்னத்தைப் பிடித்துச் சென்று அரசன் முன் வைத்த உடனே, அன்னம் தனது சுற்றமாகிய மற்ற அன்னங்களைக் காணாமல் வருந்தியது; மன்னவனைக் கண்டு மருண்டது.

‘அஞ்சாதே!’ என அரசன்
——————————————-
அன்னத்தைத் தேற்றுதல்.
——————————————-

‘அஞ்சல் மடவனமே! உன்றன் அணிநடையும்
வஞ்சி அனையார் மணிநடையும்- விஞ்சியது
காணப் பிடிததுகாண்,’ என்றான் களிவண்டு
மாணப் பிடித்தார் மன்.

மதுவை உண்டு களிக்கும் வண்டுகள் மிகுதியாய் மொய்த்துள்ள மாலையை அணிந்த நளன் ,” இளமை பொருந்திய அன்னமே, அஞ்சாதே! உனது அழகிய நடையும், வஞ்சிக் கொடி போன்ற பெண்களின் அழகிய நடையும் ஆகிய இரண்டனுள் எது சிறந்தது என்று கண்டறிவதற்காகவே உன்னைப் பிடித்துக்கொண்டு வரச் செய்தேன்! வேறொன்றுமில்லை! ” என்றான்.

அன்னம் அச்சம் நீங்கல்.
—————————————-

செய்ய கமலத் திருவை நிகரான
தையல் பிடித்த தனியன்னம் – வெய்ய
அடுமாற்ற மில்லா அரசன்சொற் கேட்டுத்
தடுமாற்றம் தீர்ந்ததே தான்.

(தையல் = தோழி, வெய்ய = கொடுமையான, அடு மாற்றம் = கொல்லும் சொல், தான் = அசை. )

செந்தாமரையில் வீற்றிருக்கும் இலக்குமியைப் போன்றவளான தோழி பிடித்த ஒப்பற்ற அன்னம், கொடுமையான கொலைத் தொழில் இல்லாத நளனது சொல்லைக் கேட்டு மனக்கலக்கம் தீர்ந்தது.

தமயந்தியைப்பற்றி அன்னம் நளனுக்குக் கூறல்.
——————————————————————

‘திசைமுகந்த வெண்கவிகைத் தேர்வேந்தே! உன்றன்
இசைமுகந்த தோளுக் கிசைவாள் – வசையில்
தமையந்தி என்றோதும் தையலாள் மெந்தோள்
அமையந்தி என்றோர் அணங்கு.

( திசைமுகந்த = திசைகளில் பரவிய, வெண்கவிகை = வெண்மையான குடை, அமை = மூங்கில், அந்தி = அழகி, அணங்கு = தெய்வப் பெண். )

‘எட்டுத் திக்குகளிலும் பரவிய வெண்கொற்றக் குடையுடையுடைய தேரினையுடைய மன்னனே, உன் புகழைத் தாங்கிய தோள்களுக்கு, மூங்கில் போலும் அழகிய மெல்லிய தோள்களையுடைய ஒப்பற்ற தெய்வமகள் போன்ற குற்றமற்ற தமயந்தி என்று கூறப்படுகின்ற ஒருத்தி பொருத்தமாவாள்.’
இவ்வாறு அன்னம் அவன் தன் அச்சத்தைப் போக்கிப்பாதுகாத்ததற்கு நன்றி பாராட்டும் முறையில் கூறியது.

நளன், ‘தமயந்தி யார்?’ எனக் கேட்டல்.
——————————————————–

அன்னம் மொழிந்த மொழிபுகா முன்புக்குக்
கன்னி மனக்கோயில் கைக்கொள்ளச் – ‘சொன்னமயில்
ஆர்மடந்தை?’என்றான் அனங்கன் சிலைவளைப்பப்
பார்மடந்தை கோமான் பதைத்து.

( புக்கு = புகுந்து, அனங்கன் = உடலற்ற மன்மதன் )

அன்னம் கூறிய அச்சொல் செவியில் நன்கு நுழையும் முன்பே நளன் மனமாகிய கோயிலுக்குள் தமயந்தி சென்று , அதைத் தனதாக்கிக்கொண்டான். ஆதலால் , மன்மதன் அவன் கரும்பு வில்லை வளைத்து அம்பு தொடுத்து எய்ய, நிலமகளுக்குத் தலைவனான நளன் , துடிதுடித்துக் காதலால் மயங்கி, ” நீ கூறிய மயில் போன்றவள் யாருடைய மகள்?” என அன்னத்தை வினவினான்.

நளன் தமயந்தியைப் பற்றி விளக்கிக் கூறுகின்றது.
————————————————————————–

‘எழுவடுதோள் மன்னா! இலங்கிழையேர் தூண்டக்
கொழுநுதியிற் சாய்ந்த குவளை – உழுநர்
மடைமிதிப்பத் தேன்பாயும் மாடொலிநீர் நாடன்
கொடைலிதர்ப்பன் பெற்றதோர் கொம்பு.

( எழு = இருப்புத்தூண், அடு = வென்ற, இலங்கிழை = (இலங்கு + இழை) விளங்குகின்ற அணி, விதர்ப்பன் = கொடைக்குணம் பொருந்திய விதர்ப்ப நாட்டு அரசன், கொம்பு = பூங்கொம்பு போன்றவளான தமயந்தி.)

‘இருப்புத்தூணை வென்ற தோள்களையுடைய அரசனே, யான் கூறிய விளங்குகின்ற அணிகளை அணிந்த அப்பெண்ணானவள், உழவர்கள் ஏரில் பூட்டிய மாடுகளைத் தூண்டி நடத்த , அப்போது அவ்வேரின் கொழுவின் முனையால் கீறப்பட்டுச் சாய்ந்து கீழே வீழ்ந்த குவளை மலர்களி , நீர் வரும் மடைகளில் அவர்கள் காலால் மிதித்தலினால் அவற்றிலுள்ள தேனானது வழிந்து பாய்ந்தோடுகின்ற வயற்புறங்களில் நீர் ஓடுகின்ற ஒலிகள் மிக்க நீர் வளம் பொருந்திய நாட்டையுடையவனாகிய கொடையிற்சிறந்த விதர்ப்ப நாட்டு மன்னன் பெற்று வளர்த்த ஒப்பற்ற பூங்கொம்பு போன்றவள் ஆவாள்.

தமயந்தி விதர்ப்ப நாட்டு மன்னன் மகள் என்று கூறிய அன்னம் இனி அவளுடைய அழகைக் கூறுகின்றது.

பெண்மை அரசு.
———————————

‘ நாற்குணமும் நாற்படையா ஐம்புலனும் நல்லமைச்சர்
ஆர்க்குஞ் சிலம்பே அணிமுரசா – வேற்படையும்
வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்
ஆளுமே பெண்மை யரசு.

( ஆர்க்கும் = ஒலிக்கும், அணிமுரசு = அழகிய முரசு )

‘ நாணம், மடம், ஆச்சம், பயிர்ப்பு, என்னும் நான்கு குணங்களையே , தேர், யானை, குதிரை, காலாள் என்னும் நான்கு வகை சேனைகளாகக் கொண்டு ; மெய் , வாய் , கண், மூக்கு , செவி எனும் ஐம்பொறிகளையும் வழிச் செல்கின்ற அறிவையே சிறந்த அமைச்சர்களாகக் கொண்டு , காலில் அணிந்துள்ள ஒலிக்கின்ற சிலம்பே அழகிய பேரிகையாய் விளங்க , வேற்படையும் வாட்படையுமே இரு கண்களாக , அவள் பெண் இயல்பாகிய அரசை ஆட்சி புரிகின்றாள்.

‘பெண் இயல்பு’ என்னும் அரசை ஆட்சி செய்கின்றாளாம் தமயந்தி.அதை இப்பாடல் விளக்குகின்றது.

சிலம்பின் இரக்கம்.
—————————

‘மோட்டிளங் கொங்கை முடியச் சுமந்தேற
மாட்டா திடையென்று வாய்விட்டு – நாட்டேன்
அலம்புவார் கோதை அடியிணையில் வீழ்ந்து
புலம்புமாம் நூபுரங்கள் பூண்டு.’

( மோடு = உயர்வு, கொங்கை = முலை, நூபுரங்கள் = சிலம்புகள் )

‘தமயந்தியினுடைய இடையானது உயர்ந்த இளமுலைகளை அவளது வாழ்நாள் முழுவதும் சுமந்து நிற்கும் வன்மையுடையதாகாதெனக் காலில் அணிந்துள்ள சிலம்புகள் , புதிய தேன் மேலெழும் மலர் சூடிய கூந்தலாளின் இரண்டு அடிகளிலும் வீழ்ந்து அவ்வடிகளுக்கு அணியாக அமைந்து வாய் விட்டுப் புலம்பும்!’

முலைகள் பாரமுடையன; ஆதலின் ,இடை அவற்றைத் தாங்க முடியாமல் ஒடிந்துவிடுமாம்! இதை நினைத்து சிலம்புகள் புலம்புகின்றன.

நுடங்கும் நுண்ணிடை.
——————————–

‘என்றும் நுடங்கும் இடையென்ப ஏழுலகும்
நின்ற கவிகை நிழல்வேந்தே! – ஒன்றி
அறுகாற் சிறுபறவை அஞ்சிறகால் வீசும்
சிறுகாற்றுக் காற்றாது தேய்ந்து.’

( நுடங்கும் = துவளும், கவிகை = குடை, ஆற்றாது = பொறுக்க முடியாமல். )

‘இவ்வுலகின் ஏழு தீவுகளிலும் நிலைத்த குடை நிழலையுடைய அரசனே , ஆறு கால்களையுடைய சிறிய பறவைகளாகிய வண்டு, ஒன்று கூடித் தம் அழகிய சிறகுகளினால் உண்டாக்குகின்ற மென்மையான் காற்றுக்கும் பொறாமல் மெலிவடைந்து எப்போதும் அவள் இடை துவளும்.’

வண்டுகளின் சிறகுகள் எத்துணை மெல்லியவை! அவற்றிலிருந்து எவ்வளவு காற்று வீசும்! அக்காற்றுக்கே தாங்க முடியாமல் அவ்விடை வருந்துமாம்! அவ்வளவு சிறிய இடையாம்!

நெற்றியழகு.
——————

‘செந்தேன் மொழியாள் செறியளாக பந்தியின்கீழ்
இந்து முறியென் றியம்புவார் – வந்தென்றும்
பூவாளி வேந்தன் பொருவெஞ் சிலைசார்த்தி
ஏவாளி தீட்டும் இடம்.’

( செறி = நெருங்கிய , பொரு வெஞ்சிலை = போர் செய்கின்ற கொடிய வில், அளகம் = கூந்தல், இந்து = நிலவு, பூவாளி = பூவாகிய அம்பு )

‘பூவாகிய அம்பினையுடைய மன்மதன் எக்காலத்தும் வந்து போர் செய்கின்ற கொடிய வில்லைப் பொருந்த வைத்து, அம்பின் வரிசைகளைத் தீட்டிக் கூர்மை செய்யும் இடம், நல்ல தேன் போன்ற இனிய சொற்களையுடைய தமையந்தியின் நெருங்கிய முன்னுள்ள கூந்தல் வரிசையின் பக்கத்திலுள்ள பிறைத்துண்டாகிய நெற்றி என்று கூறுவர் புலவர்.’

‘உனக்கும் அவட்கும் தொடர்பென்ன?’ என்று
———————————————————
நளன் அன்னத்தை வினவுதல்.
—————————————-

‘அன்னமே ! நீயுரைத்த அன்னத்தை என்னாவி
உன்னவே சோரும்! உனக்கவளோ – டென்னை
அடை’வென்றான் மற்றந்த அன்னத்தை முன்னே
நடைவென்றாள் தன்பால் நயந்து.

( அடைவு = தொடர்பு, நயனது = விரும்பி )

நளன், இவ்வாறு கூறிய அந்த அன்னப் பறவையை நடையினால் மிக்க இளமைப் பருவத்திலேயே வெற்றி கொண்டவளாகிய தமயந்தியின் மேல் ஆசை கொண்டு, ‘ அன்னமே, நீ கூறிய அன்னத்தைப் போன்றவளாகிய தமயந்தியை நினைக்கும்போதே என்னுயிர் வாட்டமுறுகின்றது! அவளுடன் உனக்குள்ள தொடர்பு யாது?’ எனக் கேட்டான்.

‘உனக்கும் அவளுக்கும் தொடர்பென்னா?’ எனக் கேட்டதிலிருந்து தனது காதலை அன்னப்பறவை சொல்லுந்தகுதியில் அத்தொடர்புளதோ என்ற குறிப்பையும், ‘சொன்னால் அன்னத்தின் சொல்லை தமயந்தி ஏற்றுக்கொள்வாளோ ! அத்தகைய மதிப்பு அதனிடத்தில் அவளுக்கு உளதோ!’ என்ற குறிப்பையும் நாம் பெறலாம்.

அன்னம் தமயந்தியின் நடையைக் கற்கத் தான்
—————————————————————
அவளிடம் வந்ததாகக் கூறல்.
—————————————

பூமனைவாய் வாழ்கின்ற புட்குலங்கள் யாமவள்தன்
மாமனைவாய் வாழும் மயிற்குலங்கள்; – காமன்
படைகற்பான் வந்தடைந்தான்; பைந்தொடியாள் பாத
நடைகற்பான் வந்தடைந்தோம் நாம்.

( பூ மனை வாய் = பூவாகிய மாளிகையில், புட்குலங்கள் = பறவைக்குலங்கள், பைந்தொடியாள்= பசுமையான வலைகளை அணிந்த தமயந்தி )

‘மன்மதன் தமயந்தி தன் விழியாகிய அம்பு எய்வதைக் கண்டு அம்பெய்திப் பழகிக்கொள்ள அங்கு வந்து சேர்ந்தான்; யாங்கள் பசுமையான வளையலை அணிந்த தமயந்தியின் நடையைக் கற்பதற்காக வந்து சேர்ந்தோம்; யாங்கள் ‘மலர்’ என்னும் மாளிகையில் வாழ்கின்ற மயிலினது கூட்டத்தைப் போன்ற தோழிப் பெண்கள் என்று எங்களைக் கண்டோர் கூறும்படி அவளுடன் பழக்கம் கொண்டுள்ளோம்!’

( அன்னம் இவ்வாறு கூறுவதால் நளன் காதலை உரைத்தற்குத் தகுதி உடையதே அன்னம் என்னும் குறிப்பையும் ஆசிரியர் உணர்த்துகின்றார்.)

நளன் காதல்.
———————-

இற்றது நெஞ்சம் ; எழுந்த திருங்காதல்;
அற்றது மானம் ; அழிந்ததுநாண்;- ‘மற்றினியுன்
வாயுடைய தென்னுடைய வாழ்வெ’ன்றான் வெங்காமத்
தீயுடைய நெஞ்சுடையான் தேர்ந்து.

( இருங்காதல் = பெருங்காதல், அற்றது = நீங்கியது, வெங்காமம் = கொடிய காமம் )

இவ்வண்ணம் அன்னம் கூறியதும் நளனது மனம் தன்னிலையை இழந்தது! மிக்க காதல் எழுந்தது! பெருமை நீங்கியது ! வெட்கம் இல்லையானது! கொடிய காமம் என்னும் தீப்பற்றிய மனமுடையவனாகிய நளன், சற்றே அறிவு தெளிந்தான்; பின்பு , ” என் உயிர் வாழ்க்கை உன் வாயிலிருந்து வரும் சொற்களில் இருக்கிறது! ‘ என்று கூறினான்.

அன்னம் நளனுக்கு ஆறுதல் கூறிச் செல்லல்.
————————————————————–

‘வீமன் திருமடந்தை மென்முலையை உன்னுடைய
வாம நெடும்புயத்தே வைகுவிப்பேன் – சேம
நெடுங்குடையாய்!’ என்றுரைத்த நீங்கியதே அன்னம்
ஒடுங்கிடையாள் தன்பால் உயர்ந்து.

( வைகுவிப்பேன் = பொருந்தச் செய்வேன் , சேம நெடுங்குடை = குடிமக்கட்கு நன்மை செய்கின்ற குடை )

‘ நாட்டு மக்கட்கு நன்மை செய்கின்ற விரிந்த குடையை உடையவனே, வீமராசனுடைய செல்வ மகளான தமயந்தியின் இளமை தவழும் மார்பினை, உன்னுடைய அழகிய உயர்ந்த தோள்களைப் பொருந்தச் செய்விப்பேன்!’ என்று அன்னம் கூறிவிட்டு நுண்மையான இடையை உடையவளாகிய தமயந்தியிடம் பறந்து சென்றது.

நீங்கிய அன்னத்தின் நினைவில் மிதத்தல்.
————————————————————

‘இவ்வளவில் செல்லுங்கொல்! இவ்வளவில் காணுங்கொல்!
இவ்வளவில் காதல் இயம்புங்கொல்!-இவ்வளவில்
மீளுங்கொல்!’ என்றுரையா விம்மினான் மும்மதம்நின்று
ஆளுங்கொல் யானை அரசு.

( மதம் = யானைகளுக்குரிய கன்ன மதம். )

அன்னம் சென்றது. சென்றவுடன் நளன் மனம் அலைபாய்கின்றது! அதனை ஆசிரியர் மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டுகின்றார்.

மூன்றுவகை மதங்களும் மிகுந்து அதனால் அவைகளின் வழிபட்டு நிற்கும் கொலைத் தொழிலைப் பூண்ட யானையையுடைய நளன் என்னும் மன்னன்,’ அன்னமானது இத்தனை நேரம் வீமன் தலை நகரான குண்டின புரத்தை அடைந்திருக்குமோ! இத்தனை நேரம் தமயந்தியைக் கண்டிருக்குமோ! இத்தனை நேரத்திற்குள் எனக்கு அவளிடமுள்ள உண்மையான அன்பை உரைத்திருக்குமோ! இதற்குள் அங்கிருந்து திரும்புமோ! திரும்பி வந்து கொண்டிருக்குமோ!’ என்று கூறிக் கூறி பெரு மூச்சு விட்டு ஏங்கிக்கொண்டிருந்தான்.

தம் வாழ்வில் காதல் அனுபவத்தையுடையவர் இப்பாடலின் அருமையை நங்குணர்வர்.

மேலும் வருந்துதல்.
———————————–

சேவல் குயிற்பெடைக்குப் பேசுஞ் சிறுகுரல்கேட்டு
ஆவி உருகி அழிந்திட்டான் – பூவின்
இடையன்னம் செங்கால் இளவன்னம் சொன்ன
நடையன்னம் தன்பால் நயந்து.

( சேவல் குயில் = ஆண் குயில், பெடைக்கு = பெண் குயிலுக்கு. )

நளன் , தாமரைப் பூவில் வாழ்கின்ற , சிவந்த கால்களையுடைய அன்னப் பறவை சொன்ன அன்னம் போன்ற நடையினையுடைய தமயந்தியின் மீது காதல் மிக்கு, ஆண் குயிலானது பெட்டைக் குயிலுடன் பேசுகின்ற இனிமையான குக்ரலைக் காதால் கேட்டு தளர்ந்து வருந்தினான்.

மயிலைக்கண்டு வருந்துதல்.
————————————-

அன்னம் உரைத்த குயிலுக் கலசுவான்
மென்மயில்தன் தோகை விரித்தாட- முன்னதனைக்
கண்டாற்றா துள்ளங் கலங்கினான் ; காமநோய்
கொண்டார்க்கிஃது அன்றோ குணம்.

( ஆற்றாது = பொறுக்க மாட்டாமல்.)

அன்னத்தால் சொல்லப்பெற்ற குயிலினது குரல் போன்ற குரலையுடைய தமயந்தியைப் பெறத் தளர்ந்து நிற்கும் நளன், மென்மையான தன்மையுடைய தனது தோகையை மயில் விரித்து ஆடிக்கொண்டிருக்க , தன் எதிரில் அதைப் பொறுக்க முடியாமல் மனம் கலங்கினான். காதல் நோய் கொண்டவர்க்கு இது இயல்பே அன்றோ?
மயில் ஆடுவது, மயில் போன்ற சாயலையுடைய தமயந்தியை நினைவுக்குக் கொண்டு வருவதால், நளனது வருத்தம் மிக்கதென்க.

நளன் கொடியைக் கண்டு வருந்துதல்.
—————————————————-

‘வாரணியுங் கொங்கை மடவாள் நுடங்கிடைக்குப்
பேருவமை யாகப் பிறந்துடையீர்;- வாரீர்
கொடியார்!’ எனச்செங்கை கூப்பினான் நெஞ்சம்
துடியா நெடிதுயிராச் சோர்ந்து.

( வார் = கச்சு, ஆர் = சிறப்பு விகுதி, நெடிது உயிரா = பெருமூச்சு விட்டு. )

நளன் மனந்துடித்து, பெருமூச்சு விட்டு, ” பூங்கொடிகளே , கச்சினை அணிந்த முலையினையுடைய இளமை பொருந்திய தமயந்தியின் துவளும் இடைக்குச் சிறந்த உவமைப் பொருளாகத் தோன்றி அதன் பயனைப் பெற்றுள்ளீர்கள்; ஆகலின், உங்களுடைய அழகு அவளுடைய இடையழகு போன்றதா என்பதைக் காண வேண்டும்! வாருங்கள்!” என்று கூறித் தன் சிவந்த கைகளைக் குவித்துக் கொடிகளைத் தொழுதான்.

தமயந்தியின் கொங்கை முதலியவற்றால் தன் காமம்
———————————————————-
தணியும் என நளன் நினைத்தல்.
—————————————-

‘கொங்கையிள நீரால் குளிர்ந்தவிளஞ் சொற்கரும்பால்
பொங்கு சுழியென்னும் பூந்தடத்தில் – மங்கைனறுங்
கொய்தாம வாசக் குழல்நிழற்கீழ் ஆறேனோ
வெய்தாமக் காமவிடாய் வெப்பு!’

( கொய் தாமம் = மணமுடைய , அப்போதே பறித்தெடுக்கப்பட்ட மலரால் ஆன மாலை.)

‘தமயந்தியினுடைய முலைகளாகிய இளநீரினாலும், குளிர்ச்சி பொருந்திய மென்மையான சொற்களாகிய குப்பஞ்சாற்றினாலும் ,அழகையுடைய உந்திச் சுழிஎன்னும்தாமரைத் தடத்தினில் நறுமணம் மிகுந்த அப்பொழுதே பறித்துச் சூடிய மலர்மாலையினையுடைய மணமுள்ள கூந்தலின் நிழலிலே கொடிய அந்தக் காம வெப்பத்தை ஆற்றிக்கொள்ளப் பெறேனோ?’

அன்னம் தமயந்தியை அடைதல்
——————————————

மன்னன் விடுத்த வடிவில் திகழ்கின்ற
அன்னம்போய்க் கன்னி அருகணைய – நன்னுதலும்
தன்னாடல் விட்டுத் தனியிடஞ்சேர்ந் தாங்கதனை
என்நாடல் சொல்லென்றாள் ஈங்கு.

( அருகு அணைய = அருகில் சேர, நன்னுதல் = ( நல் + நுதல் ) அழகிய நெற்றியை உடைய தமயந்தி , ஆடல் விளையாட்டு, நாடல் = தேடுதல்.)

நளன் தூதாக அனுப்பிய அழகால் திகழ்கின்ற அன்னப்பறவை, பறந்து சென்று , தமயந்தியிடம் சேர்தலும், அழகிய நெற்றியை உடைய தமயந்தியும் பூப்பறித்தல் முதலிய தன் சோலை விளையாட்டுகளை விட்டுவிட்டு, யாருமில்லாத ஒரு தனித்த இடத்திலே அன்னத்தை அழைத்துப் போய் , ஆங்கு அவ்வன்னத்தைப் பார்த்து , ‘ நீ இங்கு என்னைத் தேடி வந்தது எதற்காக ?’ என்று வினவினாள்.

‘உனக்கு தக்கான் தனக்கு நிகரிலா நளன்.’
——————————————————

‘செம்மனத்தான் தண்ணிளியான் செங்கோலான் மங்கையர்
தம்மனத்தை வாங்குந் தடந்தோளான் – மெய்ம்மை
நளனென்பான் மேனிலத்தும் நானிலத்தும் மிக்கான்
உளனென்பான் வேந்தன் உனக்கு.’

( தண் அளியான் = குளிர்ச்சி பொருந்திய கருணையுடையவன், தடந்தோளான் = பெரிய தோள்களையுடையவன், மிக்கான் = சிறந்தவன் )

‘ நல்ல மனம் உள்ளவனும், அன்போடு கூடிய இரக்க முடையவனும் , அறவழியினின்று தவறாது ஆட்சி செய்கின்றவனும், இளம் பெண்களின் மனத்தைத் தம்மிடம் இழுக்கின்ற நீண்ட உயர்ந்த தோள்களையுடையவனுமான உண்மையுள்ள நளன் என்னும் பெயரையுடையான், மேலுலகத்திலும் இவ்வுலகத்திலும் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத புகழையுடையான் இருக்கின்றான்.அவனே உனக்குக் காதலனாவான்!’என்றது அன்னம்.

திருமாலும் நளனுக்கு நிகராகான்.
———————————————-

‘அறம்கிடந்த நெஞ்சும் அருளொழுகு கண்ணும்
மறம்கிடந்த திண்டோள் வலியும் – திறங்கிடந்த
செங்கண்மால் அல்லனேல் தேர்வேந்தர் ஒப்பரோ
அங்கண்மா ஞாலத் தவற்கு?’

( அங்கண் = அழகிய இடத்தை உடைய, மாஞாலம் = பெரியவுலகம். )

தருமம் குடி கொண்ட மனமும் , இரக்கவுணர்வே வழிகின்ற கண்களும், வீரம் மிக்க திண்மையான தோள்களின் வலிமையும் உள்ளவனாயிருத்தலால், அழகிய இடத்தையுடைய இப்பெரு மண்ணுலகத்தில் அந்நளனுக்குச் சிவந்த கண்ணினையுடைய திருமாலே நிகராக மாட்டான் என்றால், மற்றத் தேர் ஊர்ந்து செல்லும் அரசர் அவனை ஒப்பர் எனக் கூறலாமோ? (கூறலாகாது)

தமயந்தி நளன்பால் உளத்தைச் செலுத்துதல்.
————————————————————-

புள்ளின் மொழியினொடு பூவாளி தன்னுடைய
உள்ளங் கவர ஒளியிழந்த – வெள்ளை
மதியிருந்த தாமென்ன வாய்ந்திருந்தாள் வண்டின்
பொதியிருந்த மெல்லோதிப் பொன்.

( புள் = பறவை, வெள்ளை மதியிருந்ததாம் என்ன = வெண்மை நிலவு இருந்ததைப் போல, ல்பொன் = திருமகள் ( திருமகளைப் போன்ற அழகுடைய தமயந்தி.)

வண்டினம் தங்கிய மென்மையான கூந்தலையுடைய திருமகளைப் போன்ற தமயந்தி, அன்னத்தின் சொல்லோடு மன்மதனால் எய்யப்படுகின்ற மலர் அம்புகள் தன்னுடைய மனத்தைக் கொள்ளை கொண்டு விட்டன ஆதலால், தன் ஒளி குறைந்த வெண்ணிலவு இருந்தது என்னும்படி காதலால் உள்ளம் வருந்த வெண்மை நிறம் வாய்ந்தவளாயினாள்.

அன்னம் நளனது காதலைக் கூறல்.
————————————————

மன்னம் மனத்தெழுந்த மையல்நோய் அத்தனையும்
அன்னம் உரைக்க அகமுருகி – முன்னம்
முயங்கினாள் போற்றன் முலைமுகத்தைப் பாரா
மயங்கினாள் ; என்செய்வாள் மற்று?

( முயங்குதல் = சேர்தல், பாரா =பார்த்து, மற்ரு = வேறு. )

நளன் நெஞ்சில் உள்ள காதலையெல்லாம் அன்னப் பறவையானது எடுத்து விளக்கிச்சொல்ல , தமயந்தி உள்ளம் கரைந்து நளனுக்குத் தான் உரியளாகுமுன்பே , அவனைச் சேர்ந்தவள் போன்று மிக்க ஆசையுடையளாய் , தனது மார்பைப் பார்த்து நளன் பால் காதலால் மயங்கினாள். வேறு அவள் யாது செய்ய முடியும்?

(‘அவள் தன் முலைமுகம் பார்த்தது எதற்காக?’ எனின், தலைவனை முயங்கிய பெண்டிர் தலைவன் மார்பொடு சேர்ந்த தம் முலைகளைப் பார்த்துக் கொள்வது மரபு.)

{‘முலைமீது கொழுநர்கைந் நகம்மேவு குறியை
முன்செல்வம் இல்லாத அவர்பெற்ற நிதிபோல்
கலைநீவி யாரேனும் இல்லா இடத்தே
கண்ணுற்று நெஞ்சங் களிப்பீர்கள் திறமின்!’

— என்று கலிங்கத்துப்பரணி ஆசிரியரும் கூறினார். ‘கணவனுடைய கைந்நகம் பட்ட முலைகளை யாரும் இல்லாத இடத்தில் பார்த்து மகிழ்வீர்,’என்பது பொருள்.}

தமயந்தி தன் கருத்தை நளனுக்குச் சொல்லி அனுப்புதல்.
————————————————————————

‘வாவி உறையும் மடவனமே! என்னுடைய
ஆவி உவந்தளித்தாய் ஆதியால், – காவினிடைத்
தேர்வேந்தற் கென்னிலைமை சென்றுரைத்தி’ என்றுரைத்தாள்
பார்வேந்தன் பாவை பதைத்து.

( வாவி = பொய்கை, உறையும் = வசிக்கும், காவினிடை = சோலையில் )

இவ்வுலகத்திற்கு அரசனான வீமனுடைய மகளாகிய தமயந்தி, மனம் துடித்து, ‘ பூந்தடத்தில் வாழ்கின்ற இளமை பொருந்திய அன்னமே, நீ சென்று பூஞ்சோலையில் இருக்கின்ற தேரையுடைய மன்னருக்கு என் இயல்பை உரைப்பாயாக! அவ்வாறு கூறினால் , என்னுடைய உயிரை எனக்கு விருப்பத்தோடு கொடுத்தாய் ஆவாய்.’ என்று கூறினாள்.

அன்னம் தமயந்தியிடம் திரும்பி வருதல்.
———————————————————-

‘மன்னன் புயம்நின் வனமுலைக்குக் கச்சாகும்
என்ன முயங்குவிப்பேன்!’ என்றன்னம் – பின்னும்
பொருந்தவன்பால் ஓதி,மலர்ப் பூங்கணைகள் பாய
இருந்தவன்பால் போன தெழுந்து.

அன்னம், ‘னளனுடைய தோள்கள் உன் அழகிய கொங்கைகளுக்குக் கச்சு ஆகும் என்று சொல்லும்படி நான் தழுவச் செய்வேன்!’ என்று மறுமுறையும் தமயந்தியினுடைய மனம் ஏற்றுக்கொள்ளுமாறு ஆறுதல் கூறியது; பின் மன்மதனுடைய மலர் அம்புகள் தைக்கும்படி இருந்த நளனிடம் பறந்து சென்றது.

தமயந்தியின் காதல் வெளிப்படல்.
————————————————-

கொற்றவன்றன் தேவிக்குக் கோமகடள்தன் தோழியர்கள்
உற்ற தறியா உளம்நடுங்கிப் – ‘பொற்றொடிக்கு
வேறுபா டுண்டெ’ன்றார்; வேந்தனுக்கு மற்றதனைக்
கூறினாள் பெற்ற கொடி.

( கொற்றவன் = வீமன், பொற்றொடிக்கு = பொன்னாலாகிய வளையலை அணிந்த தமயந்திக்கு)

வீமனுடைய மகளாகிய தமயந்தியின் தோழிப் பெண்கள் அவலடைந்த காதல் நோயை அறிந்து நெஞ்சம் துணுக்குற்று, வீமனுடைய மனைவியிடம்போய் , ” பொன்னாலாகிய வளையலை அணிந்த உன் மகளாகிய தமயந்திக்கு இப்போது, எப்போதுமில்லாத வேறுபாடு உண்டு, ” என்று கூறினார்கள். வீமன் மனைவி அச்செய்தியை வீமனுக்கு உரைத்தார்கள்.

வீமன் தமயந்தியிடம் செல்லல்.
——————————————–

கருங்குழலார் செங்கையினால் வெண்கவரிப் பைங்கால்
மருங்குலவ , வார்முரசம் ஆர்ப்ப, – நெருங்கு
புரிவளைக்கை நின்றேங்கப் போய்ப்புக்கான் பெற்ற
வரிவளைக்கை நல்லாள் மனை.

( வெண்கவரி = வெண் சாமரை, மருங்கு = பக்கம், புரிவளை = சுழிந்துள்ள சங்கு)

வீமன் , கரிய கூந்தலையுடைய பணிப் பெண்கள் சிவந்த தங்கள் கைகளினால் தன் இரு பக்கங்களிலும் வெண்சாமரைகளின் குளிர்ந்த காற்று வருமாறு வீசி செல்லவும், வாரினால் கட்டப்பட்ட முரசுகள் முழங்கவும் , நெருங்கிச் சுழிந்துள்ள சங்குகள் இடைவிடாமல் முழங்கவும் தான் பெற்ற அழகு பொருந்திய வளையலை அணிந்த கைகளையுடைய தமையந்தியின் மாளிகைக்கு சென்றான்.

தமயந்தி தந்தையை வணங்குதல்.
——————————————————–

கோதை சுமந்த கொடிபோல் இடைநுடங்கத்
தாதை திருவடிமேல் தான்வீழ்ந்தாள் – மீதெல்லாம்
காந்தாரம் பாடிக் களிவண்டு நின்றரற்றும்
பூந்தார மெல்லோதிப் பொன்.

(பூந்தார் அம் மெல் ஓதிப்பொன் = பூமாலை அணிந்த அழகிய மென்மைத்தன்மை பொருந்திய திருமகள் போன்ற தமயந்தி.)

தேனையுண்டு மகிழ்கின்ற வண்டுகள் காந்தாரம் என்னும் பண்னை மேலெல்லாம் தங்கி ஒலிக்கின்ற பூமாலை புனைந்த அழகிய மென்மையான கூந்தலையுடைய திருமகள் போன்ற தமயந்தி , கூந்தலை தாங்கிய பூங்கொடியைப்போல, இடை துவளத் தன் தந்தையாகிய வீமன் கால்களின் மேல் விழுந்து வணங்கினாள்.

வீமன் தமயந்தியின் மனத்தை அறிதல்.
——————————————————-

பேரழகு சோர்கின்ற தென்னப் பிறைநுதல்மேல்
நீரரும்பத் தன்பேதை நின்றாலைப் – பாராக்
குலவேந்தன் சிந்தித்தான் கோவேந்தர் தம்மை
மலர்வேய்ந்து கொள்ளும் மணம்.

( கோவேந்தர்= உலகத்திற்கு அரசர்.)

மிகுந்த அழகு வழிகின்றது போல மூன்றாம் பிறையை ஒத்த நெற்றியின் மீது வியர்வை நீர் தோன்ற நின்றவளாகிய தமயந்தியைச் சூரிய குலத்தோன்றலாகிய வீமன் கண்டு, இம்மண்ணுலக அரசர்களை பூமாலை சூட்டுகின்ற தன்னுரிமைத் திருமணம் ஏற்படுத்த அப்பொழுது நினைத்தான்.

சுயம்வரத்தை அறிவித்தல்.
—————————————-

‘மங்கை சுயவரநாள் ஏழென்று வார்முரசம்
எங்கும் அறைகென்’ றியம்பினான் – பைங்கமுகின்
கூந்தல்மேல் கங்கைக் கொழுந்தோடும் நன்னாடன்
வேந்தர்மேல் தூதோட விட்டு.

பசுமை நிறம் பொருந்திய பாக்கு மரத்தின் கூந்தல் பாலையின் மீது கங்கையாற்றின் நீர்த்துளிகள் துள்ளிப் பாய்கின்ற நீர்வளமிக்க நல்ல விதர்ப்ப நாட்டு அரசனாகிய வீமன், பல நாட்டு அரசர்களிடம் தூதுவர்களைச் சுயம்வரச் செய்தியை அறிவிக்க அனுப்பினான்; அனுப்பிய பின்’ தமயந்தியின் சுயவரத் திருமண நாள் இன்றைக்கு ஏழாம் நாள் என்று நாடு முழுவது முரசறைக,’ என்று பறை அறைவோர்க்கு ஆணையிட்டான்.

சுயம்வரச் செய்தியை கேட்ட அரசர் புறப்பட்டு வருதல்.
——————————————————————————-

மாமுத்த வெண்குடையான் மால்களிற்றான் வண்டிரைக்கும்
தாமத் தரிச்சந் திரன்சுவர்க்கி – நாமத்தால்
பாவேய்ந்த செந்தமிழா மென்மை பரந்ததே
கோவேந்தர் செல்வக் குழாம்.

( மாமுத்த வெண்குடை = பெரிய முத்துகளாலான, மால்களிறு = பெரிய ஆண் ஆனை, அரி = ஆண் சிங்கம் போன்ற , குழாம் = கூட்டம் )

சிறந்த முத்துப் போன்ற வெண்மை நிறம் பொருந்திய வெண்கொற்றக் குடையை உடையவனும் , பெரிய யானையை உடையவனுமாகிய, வண்டுகள் பாடுகின்ற மலர் மாலையை அணிந்த ஆண் சிங்கத்தைப் போன்ற சந்திரன் சுவர்க்கியின் பெயரைக் கொண்டு பாடல் பாடிய செந்தமிழ் என்னும்படி, இவ்வுலகத்தை ஆழும் மன்னர்களின் சிறந்த கூட்டம் வீமனுடைய நகரத்திற்கு வருவதற்கு நான்கு திசைகளிலும் வரவி வந்தது.

அரசர் கூட்டம் நகர் எங்கும் நிறைந்தமை.
——————————————————–

செந்தடையும் வண்டுறைதார்ச் செய்யாள் வளர்மார்பன்
கந்தடையும் வேழக் கடைத்தலைவாய் – வந்தடைந்த
பூவேந்தர் தங்கள்கிளை பொன்னகரில் ஈண்டிற்றே
கோவேந்தன் மாதைக் குறித்து.

( செந்து = மகரந்தம், ஈண்டிற்று = வந்து கூடியது )

மகரந்தப் பொடியில் வந்து சேர்கின்ற வண்டுகள் தங்கும் மலர் மாலையை அணிந்த திருமகள் வாழ்கின்ற மார்பையுடைய வீமன் கட்டுத் தறியைச் சார்ந்து நிற்கின்ற யானைகளையுடைய தலை வாயிலிடத்து அவ்வேந்தனுடைய மகள் தமயந்தியின் திருமணத்தை முன்னிட்டுப் பூவுலகை ஆளும் அரசர்களின் கூட்டம் அழகான அந்நகரில் வந்து சேர்ந்தது.

அரசர் கூட்டம் தங்கியிருந்த இடங்கள்.
—————————————————–

புள்ளுறையுஞ் சோலைகளும் பூங்கமல வாவிகளும்
உள்ளும் புறமும் இனிதுறைந்தார் – தெள்ளரிக்கண்
பூமகளைப் பொன்னைப் பொருவேல் விதர்ப்பந்தன்
கோமகளைத் தம்மனத்தே கொண்டு.

( உறையும் = வசிக்கும், பூங்கமல வாவி = அழகிய தாமரைக் குளம், பொருவேல் = போர் செய்கின்ற வேல் )

விளங்குகின்ற சிவந்த வரிகளையுடைய கண்கள் பொருந்திய திருமகலைப் போன்றவளும், போர் புரிகின்ற வெற்றிப் படையையுடைய விதர்ப்ப நாட்டு அரசனாகிய வீமனுடைய மகளுமாகிய தமயந்தியைத் தத்தம் உள்ளங்களில் வைத்துக்கொண்டு பறவைகள் வாழ்கின்ற சோலையிடங்களிலும், அழகிய தாமரை படர்ந்த தடாகக்கரை ஓரங்களிலும் , நகரின் உள்ளிடம் வெளியிடம் எங்கணும் அரசர்கள் இன்பத்துடனே தங்கியிருந்தார்கள்.

 திரும்பிய அன்னத்தை நளன் காணல்.
—————————————————–

வழிமேல் விழிவைத்து வாள்நுதலாள் நாம
மொழிமேற் செவிவைத்து மோகச் – சுழிமேல்தன்
நெஞ்சோட வைத்தயர்வான் கண்டா நெடுவானில்
மஞ்சோட அன்னம் வர.

( மஞ்சு ஓட = மேகங்கள் ஓட. )

இவ்வாறு சுயம்வர முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்க, தமயந்தியிடமிருந்து திரும்பிய அன்னம் நளனைக் காண்கிறது. வழிமேல் விழி வைத்துக் காத்துக்கொண்டிருந்த நளன் அன்னத்தை காண்கிறான்.
அன்னம் சென்ற வழியின்மீது தன் கண்பார்வையை செலுத்தியிருந்தான் ; ஒளி பொருந்திய நெற்றியையுடைய தமயந்தியின் பெயராகிய சொல்லின்மீதே தன் செவிகளை நிறுத்தினான்; தமயந்தியின் மேல் கொண்ட காதல் என்னும் நீர்ச்சுழியில் தன் மனம் சுழன்று செல்ல விட்டான்; இங்ஙனம் வருந்துகின்றவனாகிய நளன் பெரிய வானிலுள்ள மேகங்கள் தன் சிறகுகளிலிருந்து உண்டாகும் காற்றினால் ஓடும்படி அன்னம் விரைவாக வருவதைப் பார்த்தான்.

அன்னம் கூறுதல்.
—————————

முகம்பார்த் தருள்நோக்கி முன்னிரந்து செல்வர்
அகம்பார்க்கும் அற்றோரைப் போல – மிகுங்காதல்
கேளா இருந்திட்டான் அன்னத்தைக் கேளாரை
வாளால் விருந்திட்ட மன்.

( விருந்திட்ட = விருந்தாகக் கொடுத்த , மன் = அரசன். )

பகையரசர்களை தன் வாளினால் ( பறவை முதலியவற்றிற்கு ) விர்ந்தாக கொடுத்த மன்னன் , செல்வம் மிகுந்தவரின் இனிய முகத்தை நோக்கி , அவரது இரக்கத்தால் உண்டாகும் இன்சொல்லை எதிர்பார்த்து , முதலில் யாசித்தற்குரிய சொற்களைக் கூறிச்சென்று , அச்செல்வர்தம் மனக்கருத்தை அறிய எதிர்னோக்கிருக்கும் வறியவரைப் போலத் தன்மேல் தமயந்திக்கு உண்டாகின்ற மிக்க காதலை அன்னத்திடம் கேட்டுக்கொண்டிருந்தான்.

தமயந்தியைப்பற்றி அன்னத்தை வினாவல்.
——————————————————–

‘அன்னக் குலத்தின் அரசே ! அழிகின்ற
என்னுயிரை மீள எனக்களித்தாய்! – முன்னுரைத்த
தேமொழிக்குத் தீதிலவே?’ என்றான் திருந்தாரை
ஏமொழிக்கும் வேலான் எடுத்து.

( திருந்தாரை = பகைவரை, ஏம் ஒழிக்கும் = இன்பத்தை ஒழிக்கும்,)

பகையரசர்களின் செருக்கை அடக்கும் வேற்படை ஏந்திய நளன், ‘அன்னங்களின் அரசே, தமயந்தி காரணமாக துன்பப்படுகின்ற என் உயிரை மீண்டும் நிலைத்திருக்கும்படி எனக்குத் தந்தாய் ! முன்னர் நீ எனக்குக் கூறிய தேன் போலும் இனிய சொல்லுடையளாகிய தமயந்தி நலத்துடன் இருக்கின்றனளா?’ என்று அன்னத்தை வினவினான்.

நளன் மனமழிதல்
————————

கொற்றாவன்றன் ஏவலினாற் போயக் குலக்கொடிபால்
உற்றதுவும் ஆங்கவள்தான் உற்றதுவும் – முற்றும்
மொழிந்ததே அன்னம்; மொழிகேட் டரசற்கு
அழிந்ததே உள்ள அறிவு.

நளனுடைய வேண்டுகோளினால் சென்று கற்பிற் சிறந்த அத்தமயந்தியிடத்துச் சேர்ந்ததையும், அங்கு நளனது ஆற்றல் அழகு முதலியவற்றைக் கேட்டதும் அவள் கொண்ட காதலையும் , இவை யாவற்றையும் அன்னம் கூறிற்று; அச்சொற்களைக் கேட்டவுடன் நளனுக்கு எஞ்சியிருந்த அறிவும் மயங்கியது.

நளன் அடைந்த துன்பம்.
—————————-

கேட்ட செவிவழியே கேளா துணர்வோட
ஓட்டை மனத்தோ டுயிர்தாங்கி – மீட்டும்
குழியிற் படுகரிபோற் கோமான் கிடந்தான்
தழலிற் படுதளிர்போற் சாய்ந்து.

நளன் , தமயந்தியின் காதலை கேட்ட காது வழியே தன்னையறியாமலே அறிவானது ஓடிப்போக , உடைந்த மனத்தோடு உயிரை சுமந்து கொண்டு , பின்னரும் தீயிற்பட்ட இளந்தளிரைப் போல துன்பப்பட்டு , யானைப் பிடிப்பார் வெட்டிய குழிக்குள் விழுந்த யானையைப் போலச் செயல் இழந்து கிடந்தான்.

வீமனுடைய தூதுவர் நளனிடம்
—————————————-
சுயம்வரத்தைப் பற்றிக் கூறல்.
—————————————

கோதை சுயம்வரநாள் கொற்றவனுக் குற்றுரைப்ப்
ஏதமிலாக் காட்சியர்வந் தெய்தினார் -போதில்
பெடையோடு வண்டுறங்கும் பேரொலிநீர் நாடன்
அடையாத வாயி லகம்.

( உற்று உரைப்ப = ( நளனை ) அடைந்து செல்ல, ஏதம் இலா = குற்றம் இல்லாத )

நளன் இவ்வண்ணம் துன்பப்பட்டுக்கொண்டிருக்க, வீமனுடைய தூதுவர் நளனிடம் வந்தனர்.
தமயந்தியினுடைய சுயம்வரத் திருமண நாளை நளனுக்கு சென்று சொல்வதற்குக் குற்ரமற்ற தூதுவர் பூக்களில் ஆண் வண்டுகள் தம் பெண் வண்டுகளுடன் தூங்குகின்ற மிகுந்த ஒலியையுடைய நீர் வளமுடைய நிடத நாட்டுக்கு அரசனான நளனுடைய எப்போதும் அடைக்கப்படாத அரண்மனைத் தலை வாயிலில் சென்று சேர்ந்தனர்.

நளன் , குண்டினபுரம் புறப்படல்.
—————————————

காவலன்றன் தூதர் கடைக்கா வலர்க்கறிவித்து
ஏவலிற்போ யீதென் றியம்புதலும் – ‘ மாவின்
பொலிந்தேர் பூட்டெ’ன்றான் பூவாளி பாய
மெலிந்ததோள் வேந்தன் விரைந்து.

( மாவின் = குதிரையால் , பொலிந்த = விளங்கிய )

சுயம்பரச் செய்தியைக் கேட்டான் நளன். உடனே தன் குதிரைகளிற் சிறந்தவற்றைத் தேரில் பூட்டிக்கொண்டு வரச் செய்து புறப்பட்டான்.

வீமனுடைய தூதுவர்கள் வாயிற்காவலர்க்குத் தாம் வந்த காரணத்தைக் கூறினர்; பின் நளனது அனுமதியால் உள்ளே சென்று , வந்த காரணத்தைச் சொல்லினர்.சொல்லவே ,அதனால் ( காதல் எழுச்சிபெற ) மன்மதனுடைய அம்புகள் பாய்தலினால், மெலிந்து போன தோள்களையுடைய நளன் , குதிரைகளினால் சிறப்புற்று விளங்குகின்ற தேரினை மிக விரைவில் ஆயத்தம் செய்க!’ என்று தன் தேர்ப்பாகனுக்கு ஆணையிட்டான்.

‘விரைந்து தேரைச் செலுத்துக !’ எனல்.
———————————————

‘கெட்ட சிறுமருங்குல் கீழ்மகளிர் நீள்வரம்பில்
இட்ட பசுங்குவளை ஏரடித்த – கட்டி
கரையத்தேன் ஊறுங் கடல்நாடன் ஊர்க்கு
விரையத்தேர் ஊர்!’என்றான் வேந்து.

( சிறு மருங்குல் = சிறிய இடை )

‘இளைத்த சிறிய இடையையுடைய பெண்கள் நீண்ட வயல்களின் வரப்பின்மேல் களை எனப் பறித்துப் போட்ட பசுமையான குவளைப் பூக்களினின்று தேன் பெருக்கெடுத்து அஃது ஏர்களால் உழுது உண்டாகிய மண் கட்டிகளைக் கரைக்க, கடலைச் சார்ந்த விதர்ப்ப நாட்டிலுள்ள வீமனது குண்டினபுரத்திற்குத் தேரை விரைவாக செலுத்துவாயாக!’ எனத் தேர் பாகனுக்கு கட்டளை இட்டான் நளன்.

குண்டினபுரத்தை நளன் அடைதல்.
————————————

சடைச்செந்நெல் பொன்விளைக்கும் தன்னாடு பினாக்
கடற்றானை முன்னாகக் கண்டான் – அடற்கமைந்த
வில்லியரும் பொற்றாம வீமன் திருமகளாம்
நல்லுயிரும் வாழும் நகர்.

( ‘சடை செந்நெல்’ என்பதை ‘செந்நெல் சடை’ என மாறிக்கூட்டுக. ‘சடை போன்ற கதிர்களையுடையது ,’ எங.தாமம் = மாலை. )

நளன் செந்நெல் சடை போன்ற கதிர்களில் பொன் போன்ற நெல் மணிகளை விளைக்கின்ற தன்னுடைய நிடதம் எனும் நாடு பின்னாக, கடல் போலப் பெருகிய படைகள் முன் செல்ல , போர் செய்வதற்கு அமைந்த வில் வீரர்களும் அழகிய மலர் மாலை அணிந்த வீமனுடைய செல்வ திருமகலான சிறந்த தன்னுடைய உயிரப் பொன்ற தமயந்தியும் வாழும் குண்டின புரத்தைக் கண்டான்.

நாரதர் தேவருலகை அடைதல்.
————————————

நெற்றித் தனிக்கண் ணெருப்பைக் குளிர்விக்குங்
கொற்றத் தனியாழ்க் குலமுனிவன் -உற்றடைந்தான்
தேனாடுந் தெய்வத் தருவுந் திருமணியும்
வானாடுங் காத்தான் மருங்கு.

( கொற்றம் = வெற்றி பொருந்திய, உற்று அடைந்தான் = போய்ச்சேர்ந்தான்.)

பூவுலகில் இத்தகு நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்க நாரத முனிவன் தேவர் உலகத்தை அடைந்தார்.
தேன் துளிக்கும் தெய்வத்தன்மை பொருந்திய கற்பக மரங்களையும், அழகிய சிந்தாமணியையும் , வானுலகத்தையும் காப்பவன் இந்திரன்; அவனிடத்தில் சிவபெருமானுடைய நெற்றிக் கண்ணாகிய தீயையும் குளிரச் செய்யும் இசையிலே வெற்றி பூண்ட ஒப்பு உயர்வு இல்லாத ‘மகதி’ என்னும் யாழையுடைய சிறந்த தவ முனிவராகிய நாரதர் போய்ச் சேர்ந்தார்.

தேவேந்திரன் கொண்ட ஐயம்.
——————————-

‘வீரர் விறல்வேந்தர் விண்ணாடு சேர்கின்றார்
ஆரும் இலரால் !’என் றையுற்று – நாரதனார்
நன்முகமே நோக்கினான் நாகஞ் சிறகரிந்த
மின்முகவேற் கையான் விரைந்து.

( விறல் = வன்மை, ஆரும் = ஒருவரும், முகவேல் = ஒளி வீசுகின்ற வச்சிரப்படை.)

ஒரு காலத்தில் மலைகளுக்கு இருந்த சிறகுகளை வெட்டி ஒழித்த ஒளி வீசுகின்ற வச்சிரப் படையை ஏந்திய கையை உடைய இந்திரன், ‘ வீரராகிய வன்மை பொருந்திய அரசர் இவ்வுலகத்திற்கு வருவார் எவரும் இல்லயே!’ என்று ஐயமடைந்து நாரக்தருடைய அழகிய முகத்தை விரைந்து பார்த்தான்

தமயந்தியின் சுயம்வரத்தை கூறல்.
——————————————-

‘வீமன் மடந்தை மணத்தின் விரைதொடுத்த
தாமம் புனைவான் சயம்வரத்து – மாமன்னர்
போயினார்.’ என்றான் புரந்தரற்குப் பொய்யாத
வாயினான் மாதவத்தோர் மன்.

( புரந்தரற்கு = இந்திரனுக்கு )

பொய்யாத சொல்லை உடையவரும், சிறந்த தவ முனிவருக்கு அரசருமாகிய நாரதர்,’ தமயந்தியின் திருமணத்திற்காக கட்டிய மணமுடைய மலர்மாலையை அணிந்துகொள்ளும் பொருட்டுச் சுயம்வரத்திற்குச் சிறந்த அரசர் பலர் போயிருக்கின்றனர்,’ என்று இந்திரனுக்குக் கூறினார்.

தமயந்தியின் அழகு.
—————————-

‘அழகு சுமந்திளைத்த ஆகத்தாள், வண்டு
பழகு கருங்கூந்தற் பாவை , – மழகளிற்று
வீமன் குலத்துக்கோர் மெய்த்தீபம், மற்றவளே
காமன் றிருவுக்கோர் காப்பு.’

( ஆகத்தாள் = உடலையுடையவள் )

தமயந்தி அழகைச் சுமந்ததினால் இளைத்த உடலை உடையவள் ; வண்டுகள் பழகுகின்ற கருமையான கூந்தலையுடையவள்; இளைய ஆண் யானையை உடைய வீமன் மரபுக்கு ஒப்பற்ற அணையாத விளக்கொளியைப் போன்றவள்; இத்தகு சிறப்புடைய அவளே மன்மதனுடைய காதல் எனும் செல்வத்திற்குச் சிறந்த பாதுகாவலாய் அமைந்துள்ளவளாவள்.

இந்திரனும் வானவரும் சுயம்வரத்திற்கு வருதல்.
—————————————————–

மால்வரையை வச்சிரத்தால் ஈர்ந்தானும் வானவரும்
கோல்வளைதன் மாலை குறித்தெழுந்தார்- சால்புடைய
விண்ணாடு நீங்கி விதர்ப்பன் திருநகர்க்கு
மண்ணாடு நோக்கி மகிழ்ந்து.

( கோல்வலை =திரட்சி, வானவும் = வருணன், இயமன், அக்கினி ஆகிய மூவரும் )

பெரிய மலைகட்கு இருந்த சிறகுகளைத்தன் வச்சிரப்படையால் அரிந்த தேவேந்திரனும், அக்கினி, இயமன் , வருணன் ஆகிய வானவரும் , அழகிய கைவளையல்களை அணிந்த தமயந்தியின் சுயம்வர மணமாலையைப் பெற எண்ணி பெருமை பொருந்திய தேவருலகை விடுத்து, வீமனுடைய செல்வம் பொருந்திய குண்டின புரத்தை நோக்கி மகிழ்ச்சியுடன் புறப்பட்டனர்.
தேனை யுண்ட வண்டு போலத் தமயந்தியின் அழகில் ஆழ்ந்த இந்திரன் , வருணன், இமயன், அக்கினி ஆகியோர் சுயம்வரத்திற்குப் புறப்பட்டனர்.

நளனை தேவர்கள் காணுதல்.
———————————-

பைந்தெரியல் வேந்தன் பாவைபாற் போயினதன்
சிந்தை கெடுத்தனைத் தேடுவான் – முந்தி
வருவான்போல் தேர்மேல் வருவானைக் கண்டார்
பெருவானில் தேவர் பெரிது.

( பைந்தெரியல் = ( பசுமை + தெரியல்) பசுமையான மலர்மாலை )

பசுமையான மலர்மாலையை அணிந்த வேற்படையை ஏந்திய வீமனது பாவை போன்ற தமயந்தியிடம் சென்ற தன் மனத்தைக் காணாமல் விட்டுவிட்டு, அம்மனத்தைத் தேடிக் காண்பதற்கு எல்லா அரசர்களுக்கும் முன்பாக வருபவன் போலத் தேரில் விரைந்து வருகின்ற நளனை , பெரிய தேவருலகத்தில் வாழும் இந்திரன் முதலிய தேவர் வழியில் நன்கு பார்த்தனர்.

நளன் தூது போவதற்கு இசைதல்.
—————————————————

காவற் குடைவேந்தைக் கண்ணுற்று விண்ணவர்கோன்,
‘ஏவல் தொழிலுக் கிசை’என்றான்; – ஏவற்கு
மன்னவனும் நேர்ந்தான் மனத்தினால் மற்றதனை
இன்னதென வோரா திசைந்து.

( காவல் குடை = உலகைக்காக்கும் வெண்கொற்றக் குடை, ஓராது = ஆராய்ந்து. )

உலகைத் தன் நிழலில் காக்கும் வெண்கொற்ரக்குடையுடைய நளனைக் கண்டவுடன் , இந்திரன், ‘ யாங்கள் ஏவும் தொழிலை செய்ய இசைய வேண்டும்,’ என்று கூறினான்; நளனும் அவன் ஏவக் கருதிய தொழில் இன்னதென ஆராய்ச்சி செய்யாமலே அத்தொழிலுக்கு உடன்பட்டான்.

இவ்வாறு அவன் இசைவது அவனது வெள்ளை உள்ளத்தைக் காட்டுகின்றது.

தமயந்தியிடம் தூது.
———————————

‘செங்கண் மதயானைத் தேர்வேந்தே ! தேமாலை
எங்களிலே சூட்ட இயல்வீமன் – மங்கைபால்
தூதாக!’ என்றான்;அத் தோகையைத்தன் ஆகத்தாற்
கோதாக வென்றானக் கோ.

‘சிவந்த குடைவேந்தைக் மதயானையையும் , தேரையும் உடைய நளனே, எங்களுள் ஒருவர்க்குத் தேன் பொருந்திய மலர் மாலையைச் சூட்டும் வண்ணம் நற்குண செயல்களையுடைய வீமன் மகளாகிய தமயந்தியிடம் நீ தூதாகச் செல்ல வேண்டும்,’ என்று இந்திரன் கூறினான்; அதைக் கேட்டதும் நளன் அத்தமயந்தியைத் தன் மனத்தினால் சாரமற்ற பொருளாக எண்ணி , அவள்பால் கொண்ட காதல் உணர்வை அடக்கினான்.

நளனது மனநிலை.
———————————-

தேவர் பணிதலைமேற் செல்லும், திரிந்தொருகால்
மேவுமிளங் கன்னிபால் மீண்டேகும் – பாவிற்
குழல்போல நின்றுழலுங் கொள்கைத்தே பூவின்
நிழல்போலுந் தண்குடையான் நெஞ்சு.

( மேவும் = மீண்டு வரும், உழலும் = வருந்தும் )

இவ்வுலகத்து உயிர்களைப் பாதுகாத்து இன்பம் அளிக்கின்ற குளிர்ச்சி பொருந்திய குடையையுடைய நளனது மனம், தேவர்களின் ஏவலைத் தலைமேல் கொண்டு போகும்; அது மாறி ஒரு முறை மீண்டு வரும்; திரும்பி இளமைத் தன்மையுடைய தமயந்தியிடத்துச் செல்லும்; நூல் பாவினிடத்து நூலைச் செலுத்துகின்ற மூங்கிற்குழலைப்போல அங்குபோய் மீண்டும் மீண்டும் வருகின்ற தன்மையுடையதாய் திரிந்தாது.

‘காவல் கடந்து செல்வதெவ்வாறு?’
——————————————–

‘ஆவ துரைத்தாய்! அதுவே தலைநின்றேன் !
தேவர்கோ நே!அத் திருநகரின் – காவல்
கடக்குமா றென்?’என்றான் காமநீ ராழி
அடக்குமா றுள்ளத் தவன்.

காமம் என்ற நீர்ப்பெருக்குள்ள கடலை அடக்குகின்ற தன்மை கொண்ட நெஞ்சையுடைய நளன், ‘தேவர்களுக்குத் தலைவனே, நினக்கு ஆகவேண்டிய காரியத்தை நீ என்னிடம் கூறினாய்! நான் அதைச் செய்ய முனைந்து நிற்கின்றேன் ! ஆனால் , அந்த அழகிய கன்னிமாடத்திலுள்ள காவலைக் கடந்து செல்லும் வழி யாது? என்று கேட்டான்.

இந்திரன் கூற்று.
————————

வார்வெஞ் சிலையொழிய வச்சிரத்தால் மால்வரையைப்
போர்வெஞ் சிறகறுத்த பொற்றோளான் – ‘ யாருமுனைக்
காணார்;போய் மற்றவளைக் காண்,’என்றான் கார்வண்டின்
பாணுறுந் தாரானைப் பார்த்து.

( வார் = நீண்ட, வெஞ்சிலை = வலிய மைந்நாக மாலை, வெஞ்சிறகு = கொடிய சிறகு)

பெரிய மைந்நாகப் பர்வதம் என்னும் மலை ஒன்று மட்டும் நீங்கலாக தன் வச்சிராயுதத்தால் பிற பெரிய மலைகலையெல்லாம் போர் செய்து அழிக்கின்ற அவற்றின் கொடிய சிறகுகளை வெட்டி எறிந்த அழகிய தோளையுடைய இந்திரன், கருமை நிறம் பொருந்திய வண்டுகளின் பாட்டு ஒலிக்கின்ற மாலையையுடைய நளனைப் பார்த்து, ‘ உன்னை ஒருவரும் காண மாட்டார்; நீ சென்று தமயந்தியைக் கண்டு வருவாயாக, ‘ என்று கூறினான்.

( ஒரு காலத்தில் மலைகளுக்குச் சிறகுகள் இருந்தன; அதனால் அவை பறந்து சென்று பகைவர் நகர்களை அழித்தன. ஆதலின், இந்திரன் அவற்றின் சிறகுகளை வெட்டினான். ஆயினும், மைந்நாகமலை ஒன்று மட்டும் கடலுக்குள் புகுந்து தப்பியது. அக்கதையே இங்குக் குறிக்கப்பெற்றது. இக்கதையை கம்பராமாயணம் முதலிய நூல்களுள் காணலாம். )

குண்டின புரம் விண்ணுலகம் போல விளங்குதல்.
—————————————————————-

இசைமுகந்த வாயும் இயல்தெரிந்த நாவும்
திசைமுகந்தா லன்ன தெருவும் – வசையிறந்த
பொன்னாடு போந்திருந்தாற் போன்றதே போர்விதர்ப்ப
நன்னாடர் கோமான் நகர்.

( இசை = புகழ், இயல் = இலக்கணம், நாவும் = நடுவிடமும்.)

போரைச் செய்கின்ற விதர்ப்ப நாட்டு மக்களுக்கு வேந்தனாகிய வீமனுடைய நகரம் புகழையெல்லாம் தன்னுள் அடக்கிக்கொண்டிருக்கின்ற வாயில்களினாலும் மனை நூல் இலக்கணப்படி அமைந்துள்ள வீடுகளினாலும் தெருக்களினாலும் ,குற்றமற்ற தேவருலகானது நிலவுலகில் வந்து இறங்கித் தங்கியிருந்தது போன்று காட்சியளித்தது.

நளன் கன்னி மாடத்தில் தமயந்தியைக் காணல்.
———————————————————–

தேங்குவளை தன்னில் செந்தா மரைமலரப்
பூங்குவளை தாமரைக்கே பூத்ததே – ஆங்கு
மதுநோக்கும் தாரானும் வாள்நுதலும் தம்மிற்
பொதுநோக் கெதிர்நோக்கும் போது.

( நுதலும் = ஒளி பொருந்திய நெற்றியை உடைய தமயந்தியும்.)

அந்தப்புரத்தில் , வண்டுகள் தேன் விரும்பி வருகின்ற மாலையை அணிந்த நளனும், ஒளி பொருந்திய நெற்றியை உடைய தமயந்தியும், தங்களுக்குள் இயல்பான பார்வையால் நேராகப் பார்த்துக்கொண்ட பொழுது , தமயந்தியின் கண்ணாகிய கருங்குவளை மலரிலே நளனுடைய கண்ணாகிய செந்தாமரை மலரிலே தமயந்தியின் கண்ணாகிய கருங்குவளை மலர்ந்தது.

நளனைக் கண்ட தமயந்தியின் நிலை.
————————————————-

நீண்ட கமலத்தை நீலக் கடைசென்று
தீண்டு மளவில் திறந்ததே – பூண்டதோர்
அற்பின்றாழ் கூந்தலாள் வேட்கை அகத்தடக்கிக்
கற்பின்றாழ் வீழ்த்த கதவு.

இவ்வாறு நளன் கண்ணாகிய உயர்ந்த தாமரை மலரைத் தமயந்தியின் கண்ணாகிய கருங்குவளை மலர் போய்ச் சேர்ந்தவுடன், நீண்ட கூந்தலையுடைய தமயந்தியானவள் தன் ஆசையைத் தன் உள்ளம் என்னும் உள் அறையில் அடைத்துக் கற்பு என்னும் தாழ் போட்டு பூட்டியிருந்த நிறையாகிய கதவானது முன்பே தான் கொண்டிருந்த மிக்க காதலின் வேகத்தால் திறந்தது.

தமயந்தியின் உள்ளம் ஓர் அறை; மன நிறை அவ்வறையின் கதவாம்; கற்பு அக்கதவின் தாழ்; பேரன்பு அத்தாழ் திறக்கும் ஆற்றல்.

பெருகும் நளன் அழகு.
——————————

உய்ஞ்சு கரை வொட்டுங்கொல் ஒண்டொடியாள்
நெஞ்சு தடவும் நெடுங்கண்கள் – விஞ்சவே
நீண்டதோ அங்ஙனே இங்ஙனே நீள்மலராள்
ஆண்டதோள் மன்னன் அழகு.

( உய்ஞ்சு = பிழைத்து, விஞ்சவே = மிகுதியாக )

நளன் மார்பினைத் தொடுகின்ற ஒளி பொருந்திய வளையல்களை அணிந்த தமயந்தியினுடைய நீண்ட கண்கள், அம்மனமிருக்கும் மார்பின் மீது மிகுதியாக நீண்டனவோ! சிறந்த செந்தாமரை மலரில் வீற்றிருக்கின்ற திருமகள் வாழ்கின்ற தோள்களையுடைய நளனது அழகு என்னுங்கடல் தமயந்தியை கரையேற விடுமோ?

தமயந்தியின் எண்ணம்.
—————————-

‘மன்னாகத் துள்ளழுந்தி வாரணிந்த மென்முலையும்
பொன்னாணும் புக்கொளிப்பப் புல்லுவன்!’என் – றுன்னா
எடுத்தபே ரன்பை யிடையே புகுந்து
தடுத்ததே நாணாம் தறி.

‘கச்சினால் இறுகக் கட்டப்பட்ட மெல்லிய கொங்கைகளும் , பொன்னினால் ஆன அணியும், நளனுடைய மார்பிடத்துப் புகுந்து அழுத்தப்பட்டு மறையும் வண்ணம், யான் அவனைத் தழுவுவேன்,’ என்று தமயந்தி நினைத்துக் கொண்ட பெரிய அன்பு என்னும் யானையை, வெட்கம் என்னும் கட்டுத்தறி இடையில் புகுந்து தடை செய்தது.

‘கன்னி மாடம் புகுந்தனையே! நீ யார்?’
————————————————

‘காவல் கடந்தெங்கள் கன்னிமா டம்புகுந்தாய்!
யாவனோ? விஞ்சைக் கிறைவனோ! – தேவனோ!
உள்ளவா சொல்,’என்றாள் வாசற் குழைமீது
வெள்ளவாள் நீர்சோர விட்டு.

( விஞ்சைக்கு = மாய வித்தைக்கு, ஊசற்குழை = அசைகின்ற குண்டலம் )

ஊசலைப் போல அசைகின்ற காதணியின்மேல் விழிகளிலிருந்து வெள்ளம்போலப் பெருகி வருகின்ற கண்ணீரை ஒழுகவிட்டு,’ இடையேயுள்ள காவல்களையெல்லாம் கடந்து எம்முடைய கன்னி மாடத்திற்குள் புகுந்தாயே! நீ யார்? மாய வித்தையில் வல்லவனோ? தெய்வத்தன்மை பொருந்தியவனோ? உள்ளதை மறையாமல் கூறுவாயாக!’ என்று தமயந்தி கூறினாள்.

நளன் தன்னைப்பற்றிக் கூறல்.
————————————

தீராத காமத் தழலைத்தன் செம்மையெனும்
நீரால் அவித்துக் கொடுநின்று,- வாராத
பொன்னாட ரேவலுடன் போந்தவா சொல்லித்தன்
நன்னாடுஞ் சொன்னான் நளன்.

( பொன் நாடர் = தேவர் )

நளன் , ஆறாத காமத் தீயை தனது உயர்ந்த தன்மையாகிய நீரினால் தணித்துக்கொண்டு நின்று , இவ்வுலகத்திற்கு வரத்தகாத பெருமையையுடைய விண்ணுலகத் தேவர்களின் கட்டளையினால் தான் தூதனாய் வந்த வரலாற்றை எடுத்துக் கூறி, தனது நல்ல நாட்டினையும் கூறினான்.

நளன், ‘இந்திரனுக்கு மாலை சூட்டுக !’ எனல்.
—————————————————–

‘என்னுரையை யாதென் றிகழா திமையவர்வாழ்
பொன்னுலகங் காக்கும் புரவலனை – மென்மாலை
சூட்டுவாய்,’ என்றான் தொடையில்தேன் தும்பிக்கே
ஊட்டுவான் எல்லாம் உரைத்து.

( தொடையில் = மாலையில் )

தான் அணிந்துள்ள மலர் மாலையிலுள்ள தேனை வண்டுகள் உண்ணுமாறு அளிக்கின்ற நளன் , தான் வந்த காரணத்தை சொல்லி,’ எனது சொல்லை ‘இது என்ன?’ என்று இகழாமல் ,கண் இமையாதவராகிய தேவர் வாழும் விண்ணுலகை ஆட்சி செய்யும் அரசனாகிய இந்திரனுக்குச் சுயம்வர காலத்தில் நீ மென்மையான மலர் மாலையை சூட்டுவாயாக!’ என்று கூறினான்.

‘ நளமகாராசர் பொருட்டன்றோ சுயம்வரம்!’
—————————————————

‘இயமரநின் றார்ப்ப இனவலைநின் றேங்க
வயமருதோள் மன்னா! வகுத்த – சுயம்வரந்தான்
நின்பொருட்டா லென்றுநினைகென்றாள்’ நீள் குடையான்
தன்பொருட்டால் நைவாள் தளர்ந்து.

( இயம் மரம் = ஊதும் இசைக்கருவிகள், வயம் மரு தோள் = வெற்றி பொருந்திய தோள் )

உயர்ந்த குடையையுடைய நளமகாராசனுக்காகவே மனம் வருந்துபவளாகிய தமயந்தி,’ வெற்றி பொருந்திய தோள்களையுடைய வேந்தரே, பல்வேறு இசைக்கருவிகள் ஒரு பக்கம் நின்று முழங்க, சங்குக் கூட்டங்கள் மற்றோரு பக்கம் நின்று பேரொலிக்க ஏற்படுத்திய சுயம்வரம் , உம்மை மணம் செய்து கொள்வதற்காகவே ஏற்பட்டதென்று நீர் எண்ணுவீராக!’ என்று கூறினாள்.

‘தேவர்களுடன் சுயம்வரத்துக்கு வருக!’
—————————————————

போதரிக்கண் மாதராள், ‘பொன்மாலை சூட்டத்தான்
ஆதரித்தார் தம்மோ டவையகத்தே – சோதிச்
செழுந்தரள வெண்குடையாய்! தேவர்களும் நீயும்
எழுந்தருள்க!’ என்றாள் எடுத்து.

( செழுந்தரளம் = நல்ல முத்துக்கள்.)

தாமரை மலர் போன்ற சிவந்த கோடுகள் பொருந்திய கண்களையுடைய தமயந்தியானவள் , ‘ஒளி பொருந்திய செழுமையான நல்ல முத்துக்களையுடைய குடையை உடையவரே , யான் அழகிய சுயம்வர மண மாலையைச் சூட்டுதலை விரும்பிய அரசர்களுடனே தேவர்களும் நீரும் அச்சபையிலே வந்திருப்பீர்களாக!’ என்று கூறினாள்.

நளன் இந்திரனிடம் திரும்பல்.
——————————————–

வானவர்கோ நேவல் வழிசென்று வாள்நுதலைத்
தானணுகி மீண்டபடி சாற்றவே – தேன்முரலும்
வண்டார் நளன்போந்து வச்சிராயு தற்றொழுதான்
கண்டா ருவப்பக் கலந்து.

தேன் உண்ணும் வண்டுகள் ஒலிக்கின்ற குளிர்ச்சி பொருந்திய மலர்மாலை அணிந்த நளன் , தேவர்களுக்கு அரசனாகிய இந்திரனது கட்டளைப்படி தமயந்தியிடம் தூதுவனாகப் போய் ஒளிபொருந்திய நெற்றியைஉடைய தமயந்தியைக் கண்டு பேசித் திரும்பி வந்ததைக் கூறுவதற்கு வந்து, தேவர்கள் மகிழ்ச்சியடையுமாறு அவர்களோடு சேர்ந்து வச்சிரப்படையையுடைய இந்திரனை வணங்கினான்.

நிடதநாடன் நிகழ்ந்தது கூறல்.
————————————————

விண்ணவர்தம் ஏவலுடன் வீமன் திருமகள்பால்
நண்ணும் புகழ்நளனு நன்குரைத்த- பெண்ணணங்கின்
வன்மொழியுந் தேவர் மனமகிழத் தானுரைத்த
மென்மொழியுஞ் சென்றுரைத்தான் மீண்டு.

தேவர்களுடைய வேண்டுதலினால் வீமனுடைய அழகிய மகளாகிய தமயந்தியிடத்துச் சென்று புகழ் மிக்க நளன் , தேவர்களுக்காக விருப்புடன் தான் பேசிய நயமான சொற்களையும், பெண்களில் சிறந்த தமயந்தி கூறிய கொடிய சொற்களையும் , தேவர்கள் மனம் மகிழ்ச்சி அடையும் வண்ணம் திரும்பி வந்து கூறினான்.

வருணன் முதலியோர் நளனுக்கு வரமளித்தல்.
—————————————————-

‘அங்கி அமுதம்நீர் அம்பூ அணியாடை
எங்குநீ வேண்டினைமற் றவ்விடத்தே – சங்கையறப்
பெற்றாய்!’ எனவருணன் ஆகண் டலந்தருமன்
மற்றோனும் ஈந்தார் வரம்.

( அங்கி = நெருப்பு, சங்கை அற = சந்தேகமில்லாமல், ஈந்தார் = தந்தார். )

வருணன் , இந்திரன், இயமன், தீக்கடவுள் ஆகிய நால்வரும் , ‘தீ, சோறு, நீர், அழகிய பூமாலை, அணிகலன், துகில் ஆகிய இவைகளை நீ எந்த இடத்தில் பெற விரும்புகின்றாயோ, அந்த இடத்திலேயே ஐயமின்றிப் பெறுவாய்!’ என்று வரம் அளித்தார்கள்.

தமயந்தியிடம் நளன் காதல் கொண்டிருந்தும் சொன்ன சொல் தவறாமல் தமக்காகத் தூது சென்றதனால் மகிழ்ந்தனர் தேவர்; ஆதலால் , வரம் தந்தனர்.

இந்திரன், ‘ நீ செய்யும் யாகத்தில் நான் என் உருவுடன் நேரில் வந்து அவியுண்பேன்,’ எனவும்; தீக் கடவுள் , ‘ நீ தீயின்றியே சமையல் செய்யும் திறம் பெறுக,’ எனவும்; இயமன், ‘ நீ துன்புற்ற போதும் தருமம் தவறாதிருக்கவும், போரில் வேன்டும் ஆயுதங்களை பெறும் திறனையும் பெறுக ,’ எனவும்; வருணன், ‘ நீ வேண்டுங்கால் நீரும் மலர்மாலையும் பெறுக,’ எனவும் வரமீந்ததுடன் , தமயந்தியின் கற்பைக் கெடுக்க நினைப்பவர் அழியுமாறும் , நளன் வேண்டுங்கால் வேண்டும் உருவெடுக்குமாறும் வரமீந்தனர்.

தேவர் சுயம்வரமண்டபத்தைச் சார்தல்.
————————————————

அங்கவர்கள் வேண்டும் வரம்கொடுக்கப் பெற்றவர்கள்
தங்களொடுந் தார்வேந்தன் சார்ந்தனன்மேல்- மங்கை
வயமருவு கின்ற மணக்கா வலர்க்குச்
சயமரந்தான் கண்டதோர் சார்பு.

நளன், அங்குத் தேவர்கள் தாங்களே விரும்பிய வரங்களைக் கொடுக்கப் பெற்றுக்கொண்டு , இவ்வுலகத்திற்கு மேல் உள்ள அவர்களுடன் தமயந்திபால் ஆசை கொண்டு திருமணத்திற்கு வந்த அரசர்களுக்குச் சுயம்வர மண்டபமாக ஏற்படுத்திய ஓர் இடத்தில் தேவர்களுடன் போய்ச் சேர்ந்தான்.

தமயந்தி வருந்துதல்.
—————————–

தூதுவந்த காதலனைச் சொல்லிச் செலவிடுத்த
மாதுவந்து பின்போன வன்னெஞ்சால் – யாதும்
அயர்த்தாள் ; உயிர்த்தாள் ; அணிவதன மெல்லாம்
வியர்த்தாள்; உரைமறந்தாள் வீழ்ந்து.

தேவர்களுக்காகத் தூதாக வந்த தன் காதலனைத் தன் உள்ளக் கருத்தைச் சொல்லிப் போக விட்ட தமயந்தியானவள் , மகிழ்ச்சி கொண்டு அவனிடம் சென்ற தன் கொடிய மனத்தினால் , நளனிடமுள்ள குணம் செயல் முதலிய எல்லாவற்றிலும் ஐயங்கொண்டாள்; பெருமூச்செறிந்தாள்; அழகிய முகத்திலெல்லாம் வியர்வை தோன்றப் பெற்றாள்; தன்னை மறந்து தரைமேல் வீழ்ந்து பேச்சற்றுப் போனாள்.

தமயந்தி உள்ளம் முதலியவற்றைப் பறிகொடுத்தல்.
————————————————————

உள்ளம்போய் நாண்போய் உரைபோய் வரிநெடுங்கண்
வெள்ளம்போய் வேகின்ற மென்றளிர்போல் – பிள்ளைமீன்
புள்ளரிக்கும் நாடன் திருமடந்தை பூவாளி
உள்ளரிக்கச் சோர்ந்தாள் உயிர்.

( பிள்ளை மீன் = மீன் குஞ்சு, புள் = கொக்கு முதலிய பறவை )

மீன் குஞ்சுகளைக் கொக்கு முதலிய பறவைகள் கவர்கின்ற விதர்ப்ப நாட்டு வீமனுடைய திருமகள் போன்ற தமயந்தி, மன்மதனுடைய மலர்க்கனைகள் தன் உள்ளத்தில் பாய்ந்து வருத்துவதால், தனது உள்ளம் போய், வெட்கமும் போய், பேச்சும் சோர்ந்து, செம்மையான கோடுகளையுடைய நீண்ட கண்களிலிருந்து நீர் ஊற்றாக ஓட , நெருப்பிற்கிடந்து வேகின்ற மெல்லிய தளிர் போன்று ஆவி தளர்ந்து சோர்வுற்றாள்.

சுயம்வர காண்டம் பக்கம் 2

Advertisements%d bloggers like this: